Sunday 10 June 2012

கலைநயமிக்க அழகிய படைப்புகளை உருவாக்கும் கீழாம்பூர் குடிசை ஆசிரமம்

ஆழ்வார்குறிச்சி:கீழாம்பூரில் கலைநயமிக்க அழகிய படைப்புகளை உருவாக்கும் குடிசை ஆசிரமம் இலவச பயிற்சியை அளித்து பலருக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுப்பதுடன் மட்டுமல்லாமல் அழிந்துவரும் கலைகளையும் உயிர்ப்பித்து வருகிறது.அம்பாசமுத்திரம் தாலுகா கீழாம்பூரில் பாபநாசம் குடிசை ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் அழிந்துபோன.. ஏன் இன்னமும் அழிந்து கொண்டிருக்கிற நமது பண்டைய கலை மற்றும் கலாச்சார வேலைப்பாடுகளை தற்காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி அழிந்திடாத வண்ணம் பாதுகாப்பதற்காக கேரள மாநிலத்தில் பிறந்த பாபநாச சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து சன்னியாசிகளால் இறையருளால் திறம்பட நடத்தப்பட்டு வருகிறது. இந்திய கலை மற்றும் கலாச்சாரம் உலகெங்கும் பரவச்செய்யும் பணியில் பாபநாசம் குடிசை ஆசிரமம் தனது பங்களிப்பை செய்து வருகிறது. கலையை வளர்க்க வேண்டும், பிறருக்கு அது தெரியவேண்டும் என்ற அடிப்படை கருத்தை கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான கதவு, ஜன்னல் மற்றும் சேர், அழகிய பொம்மைகள், பித்தளை விளக்குகள், பெயிண்டிங், சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு கலவையால் வீடு கட்டுவது உட்பட அனைத்து வேலைகளுமே இங்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. தொழில் நுட்பத்துடனும், கலை நயத்துடனும் தேக்கு, ஈட்டி போன்ற விலையுயர்ந்த மரங்களில் உலக சிறப்புமிக்க சிற்ப வேலைப்பாடுகள் செய்வதற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு செய்யப்படும் கதவுகளில் இணைப்பே தெரியாத அளவிற்கு நுணுக்கமாக செய்வதோடு பல்வேறு அழகிய டிசைன்களும் கதவுகளில் வடிவமைக்கப்படுகிறது. இதுதவிர துணிகளில் வரையப்படும் அழகிய வண்ணப்படம், மெட்டல் போன்றவற்றால் செய்யப்படும் அழகிய டிசைன்கள், எளிதாக மடக்கி எடுத்து செல்லக்கூடிய நாற்காலிகள் மற்றும் காண்டாமிருகம், யானை, புலி போன்ற மரக்கட்டைகளால் செய்யப்படும் பொம்மைகள், பல நூறு மரத்துண்டுகளை அதிலேயே அதாவது மரத்துண்டுகளிலேயே வண்ணங்களை வேறுபடுத்தி அழகாக ஒட்டி செய்யப்படும் பெரிய பெரிய வண்ணப்படங்கள் நெஞ்சை அள்ளும் வகையில் செய்யப்படுகிறது.

பார்ப்பதற்கு இது பெயிண்டிங் போல் காணப்பட்டாலும் மரத்துண்டுகளின் நிறத்தை வைத்து அழகாக ஒட்டப்பட்டுள்ள தோகை விரித்தாடும் மயில், பறக்கும் நிலையிலுள்ள கழுகு, தன்குஞ்சுகளோடு கூடிய கோழி என எண்ணற்ற வகைகளில் செய்து முடிக்கப்பட்டுள்ள அழகிய வண்ணப்படங்களெல்லாம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. பாபநாசம் குடிசை கலை மற்றும் கைவினைப் பயிற்சி மையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கலைப்பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.பாபநாசம் குடிசை ஆசிரமம் கலை மற்றும் கைவினை பயிற்சிக்கென தமிழகத்தில் இயங்கிவரும் ஒரு தொழிற்பயிற்சி மையமாகும். இந்த பயிற்சி மையத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பயிற்சி மையத்தில் பயிற்சியாளர்களுக்கு மரத்தில் சிற்பங்கள் செதுக்குதல், வெண்கலத்தில் கலை பொருட்கள் வார்ப்பு, உலோகத் தகடுகளில் கலை பொருட்கள் செய்தல், மரப்பொருட்கள் மீது உப்புத்தாள் தேய்த்து மெருகூட்டுதல், களிமண் மற்றும் வெள்ளை சிமென்டின் சுதை வேலை ஆகிய கலைப்பயிற்சிகள் இரண்டாண்டுகள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.சிறப்பு அம்சமாக பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாதம் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகையுடன் மேல்படிப்பிற்கும், அதன்பின் திறமையின் அடிப்படையில் 10 ஆயிரம் முதல் 18 ஆயிரத்திற்கும் மேலாக மாத ஊதியத்தில் பயிற்சி மையத்திலேயே வேலைவாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இலவசமாக தங்கி பயில விடுதி வசதியும் உள்ளது.இந்த பயிற்சிகளில் சேர்வதற்கு குறைந்தப்பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓவியம் வரைவதில் திறமையும், ஆர்வமும் உடையவராக இருக்க வேண்டும். வசதியில்லாத மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். மேலும் விபரங்கள் பெற தாளாளர், பாபநாசம் குடிசையின் கலை மற்றும் கைவினைப் பயிற்சி மையம், கீழாம்பூர் என்ற முகவரியில் (செல்:94421-17018) தொடர்பு கொள்ளலாம் என குடிசை ஆசிரமம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாபநாசம் குடிசையில் கலை வளர்கிறது என்பதைவிட கலை வாழ்கிறது என்றே சொல்லலாம்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment